அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label குர்ஆனில் முரண்பாடா. Show all posts
Showing posts with label குர்ஆனில் முரண்பாடா. Show all posts

Wednesday, December 12, 2012

ஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா? 50000 ஆண்டுகளுக்கு சமமா?

 திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 3
- எம்.எம். அக்பர்

இறைவனிடம் ஒரு நாளின் அளவு பூமியிலே 1000 ஆண்டுகளுக்கு சமம் என்று குர்ஆனில் 22:47, 32:5 என்ற வசனங்கள் கூறியிருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று 70:4 வசனம் கூறுகிறது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?

முரண்பாடுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்ட குர்ஆன் வசனங்களை ஆய்வோம்.

(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.  – அல்குர்ஆன் 22:47.   

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். – அல்குர்ஆன் - 32:5

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். - அல்குர்ஆன் 70:4

இம்மூன்று வசனங்களில் 'நாள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது, 'யவ்ம்' என்னும் அரபிப்பதமேயாகும். சாதாரணமாக இருபத்தி நான்கு மணிநேரமுள்ள ஒரு நாளையே அரபியில் 'யவ்ம்' என்று கூறுவர். இன்னும் 'யவ்ம்' என்னும் பதத்திற்கு 'கால அளவு', 'காலகட்டம்' என்னும் பொருளும் கொள்வதுண்டு. குர்ஆனில், இத்தகைய பொருளில் 'யவ்ம்' என்னும் பதம் பயன்படுத்தப்பட்டதுண்டு.

'ஸலாமுடன் - சாந்தியுடன் இ(ச்சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள். இது தான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்' (என்று கூறப்படும்) (அல்குர்ஆன – 50:34) நித்தியமாக தங்கியிருக்கும் நாள் என்றால் சூரியன் உதித்து அஸ்தமிக்கும் இடையிலான கால அளவு இல்லையல்லவா? ஏனென்றால் இது எல்லைக்குள்ளான கால அளவு ஆகும். எந்நிலையிலும்  முடிவுறாத நித்தியமான அழிவில்லாத மறுமையினையே இங்கே (50:34) 'நாள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அதன் உபயோகத்திலிருந்து விளங்குகிறது.

கியாம நாளில் நிகழும் காரியங்களைக் குறித்தும் கூறும் போதும் குர்ஆன் 'நாள்' (யவ்ம்) என்னும் பதத்தையே உபயோகப்படுத்தியுள்ளது.

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.  - அல்குர்ஆன் - 101:4-5

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள். - அல்குர்ஆன் - 14:48

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். - அல்குர்ஆன் - 99:6   

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். - அல்குர்ஆன் - 89:25   


அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். - அல்குர்ஆன் - 88:2-3   

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். - அல்குர்ஆன் - 86:9   

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். - அல்குர்ஆன் - 83:6   

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. - அல்குர்ஆன் - 82:19   

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;, தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். - அல்குர்ஆன் - 80:34-37   

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். - அல்குர்ஆன் - 79:35

'பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;' - அல்குர்ஆன் - 79:6

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். - அல்குர்ஆன் - 78:38   

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். - அல்குர்ஆன் - 78:40   

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. - அல்குர்ஆன் - 78:39   

மேற்காணும் இவ்வசனங்களில் உள்ள ஒவ்வொரு சம்பவங்களுடனுமுள்ள 'நாள்' என்பது அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவே என்பது தெளிவாக விளங்கும். ஓவ்வொரு சம்பவங்களின் அடிப்படையில் கால அளவும் மாறுபாடாக இருக்கும். மனிதர்கள் தம் கர்மங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாள், மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் போலாகும் நாள் போல இருப்பதில்லை.  ஓவ்வொரு நாளின் கால அளவும் வேறுபட்டிருக்கும். அவைகளின் அளவு குறித்து அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களாகிய நாம் அதைக் குறித்து அறிய நம்முடைய கையில் எந்த வழியும் இல்லை.

கியாமநாளுடன் தொடர்புடைய இரு சம்பவங்களின் கால அளவை மட்டுமே குர்ஆன் மூலமாக அல்லாஹ் அறிவித்துத் தருகிறான். காரியங்கள் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் ஒரு நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்று 32:5ம் வசனம் மூலமாக அறிவிக்கின்றான். மலக்குகளும் ஆன்மாக்களும் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள 5000 ஆண்டுகளுக்குச் சமம் என்று 70:4ம் வசனம் மூலமாக அறிவிக்கிறான்.

இரண்டு வசனங்களிலும் விவரிக்கப்பட்டது கியாம நாளின் போதான இருவேறு சம்பவங்கள் ஆகும். இந்த இரு வேறு சம்பவங்களும் நடைபெற எடுத்துக்கொள்ளும் கால அளவும் வேறு வேறாகும் என்பதை இக்குர்ஆன் வசனங்கள் மூலமாகவே விளங்க முடிகிறது. மற்றபடி இவ்விரண்டுக்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை. இரண்டும் இரு சம்பவங்கள். இரு வேறு சம்பவங்களும் எடுத்துக்கொள்ளும் கால அளவும் இரு வேறு கால அளவாகும் என்றிருக்க இவை எப்படி முரண்பாடாகும்?

அது போல், திருக்குர்ஆனின் 22:47ம் வசனத்தில் '(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்' என்று இறைவன் கூறுகின்றான்.   நிராகரிப்போருக்கு தண்டனை உண்டு என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த போது அதை பரிகாசம் செய்து, நாங்கள் நிராகரித்து ஆண்டுகள் பல ஆகியும் தன்டனை வந்து சேராது ஏனோ? என்னும் கேள்விக்கு இறைவனில் பதிலாகும் இந்த வசனம். இறைவனின் தண்டனை சில காலத்திலேயே வந்தடைய வேண்டும் என்றில்லை. வரலாற்றில் இறைவனின் தண்டனை இறங்குவது மனிதர்களின் கணக்கை அனுசரித்தோ அவன் இஷ்டத்தை அனுசரித்தோ அல்ல. (மாறாக அது) அல்லாஹ்வின் தீர்மானப்படியாகும். அவன் இஷ்டப்படியாகும் என்பதையே இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது. அல்லாஹ்வின் கணக்குப்படி ஒரு நாள் என்பது மனிதர்களின் கணக்குப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம். ஆதலால் தண்டனையிறங்கவில்லையே என்று பரிகாசம் செய்யவேண்டாம் என்று இவ்வசனம் தெளிவாக்குகிறது. மனித வரலாற்றில் தெய்வீக தலையீடுகளை மனித கணக்குப்படி கணிப்பது கூடாது என்பதே இவ்வசனத்தின் பாடம். இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மற்ற இரு வசனங்களோடு தொடர்பு இல்லாதது ஆகும். மூன்று வசனங்களும் கூறுவது மூன்று விதமான விஷயங்களாகும். அவைகளின் சம்பவங்களும் வேறுபாடாகும். அதனால் அவைகளுக்கு இடையே எந்தவொரு முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.

தொடரும் ... இன்ஷா அல்லாஹ்...

Wednesday, December 05, 2012

மர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா? மலக்குகளா?

திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 2
 - எம்.எம். அக்பர்


ஈசா (அலை) அவர்களின் பிறப்பு குறித்து மர்யமிடத்தில் நன்மாராயங் கூறியது மலக்குகள் என்று பன்மையாக குர்ஆனின் 3:45 வசனம் கூறுகிறது. ஆனால், ஒரு மலக்கு மட்டுமே கூறியதாக குர்ஆனில் 19:17-21ம் வசனங்கள் கூறுகின்றது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?

இங்கே முரண்படுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்ப்போம்.

அல்குர்ஆன் 3:45: மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்' 


அல்குர்ஆன் - 19:17-21: அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)'' என்றார். ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்'') என்று கூறினார். அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார். ''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' எனக் கூறினார்.

மர்யம் (அலை) அவர்களின் வாழ்கையில் நடந்த இரண்டு சம்பவங்களையே குர்ஆன் வசனங்கள் கூறுகிறது என்பதை மிகத் தெளிவாக விளங்களாம்.

மர்யம் (அலை) அவர்களின் வாழ்வில், ஒரேயொரு முறை மட்டுமே மலக்குகளுடன் உடையாடல் நடந்தது என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. குர்ஆன் அப்படிக் கூறியிருந்தால் அவ்விரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்னும் வாதம் சரியானது எனலாம்.

உன்மையில் சூரத்துல் ஆல இம்ரானின் வசனம் (3:42-45) கூறும் மலக்குகளுடைய உரையாடல் ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்தல் - அதாவது நன்மாராயங்கூறல் மட்டுமேயாகும். அதைச் செய்தது மலக்குகளுடைய ஒரு கூட்டமாகும். அந்த கூட்டத்தில் எந்தெந்த மலக்குகள் உட்பட்டிருந்தார்கள் என்பதை அவ்வசனம் கூறவுமில்லை.

இந்த சந்தோஷ செய்தி அறிவிக்கப்பட்ட பின் அதை நிவைறவேற்றவே பரிசுத்த ஆத்மா என்றழைக்கப்படும், ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் மர்யத்தின் பக்கம் அனுப்பி வைத்தான். அவர் ஜனங்களிடமிருந்து தனித்திருந்து, இறைபணி செய்து வரும் மர்யம் (அலை) அவர்களை நோக்கி இறைவனின் கட்டளையை பூர்த்திசெய்ய வந்த போது நடந்த உரையாடலே அல்குர்ஆனின் 19:17-21 விரை உள்ள வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரீலின் வரவு மலக்குகள் செய்தது போல சந்தோஷ வார்த்தையை அறிவிக்க அல்ல, நிறைவேற்றுவதற்கேயாகும். பரிசுத்தமான ஒரு ஆண் குழந்தையை தானம் செய்வதற்கே யாகும். இறைவனின் முன்னறிவிப்பை நிறைவேறுவதற்கான வகையில் மர்யம் (அலை) அவர்களின் உடலில் உண்டாகக்கூடிய மாற்றங்களை உண்டாக்கும் நோக்கமே ஜிப்ரீலின் வரவின் நோக்கம் என்று விளங்கிக்கொள்ள முடிகின்றது.

எவ்வாறாயினும் இவ்விரு வசனங்களும் விவரிப்பது இரு வேறு நிகழ்வுகளையாகும்.

1.    மலக்குகளுடைய சந்தோஷ வார்த்தை குறித்த அறிவிப்பாகும்.
2.    சந்தோஷ வார்த்தையை நிறைவேற்றுவதற்கான ஜிப்ரீலின் வரவும் அது பற்றிய உரையாடலுமாகும்.

இரண்டும் இரண்டு நிகழ்வுகள், இரண்டு நிகழ்விலும் இரண்டு விதமான உரையாடல்கள், இரண்டு நிகழ்விலும் உரையாடுபவர்கள் வித்தியாசமானவர்கள். அப்படியிருக்க இரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்று எப்படி கூற முடியும்?

இறைவன் நாடினால் விளக்கங்கள் தொடரும்...

Monday, December 03, 2012

திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம்-1

 - எம்.எம். அக்பர்


திருக்குர்ஆன் முரண்பாடுகள் எதுவும் இல்லாதது அதன் அற்புதத்தன்மைக்குரிய ஆதாரம் என்று கூறுவது எப்படி?

குர்ஆனில் உள்ளவை, ஏதோ ஒரு விஷயங்களைக் குறித்த உரையாடல்களோ, சில சம்பவங்களின் விவரங்களோ அல்ல. மாறாக, அது கூறும் விஷயங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இறைவனின் ஏகத்துவத்தைக் குறித்த விஷயங்கள், படைப்புகளை வணங்குவது பற்றிய அர்த்தமற்ற கதைகளின் விவரங்கள், மரணத்திற்கு பிந்தைய வாழ்வு குறித்த திட்டவட்டமான முன்னறிவிப்புகள், பிரபஞ்ச வஸ்துக்களை பற்றிய விவரங்கள், தூதர்களின் வரலாறுகள், வரலாற்று படிப்பினைகள், தார்மீக உபதேசங்கள், தனி மனித – குடும்ப, சமூகக்கடமைகள், பொருளாதார - அரசியல் சட்டங்கள் போன்றவைகள் உட்கொள்ளும் கண்ணியத்திற்குறிய நூலாகும் இந்த திருக்குர்ஆன்.

இருபத்தி மூன்று வருடங்களாக மாறுபட்டச் சூழ்நிலையில் மாறுபட்ட விஷயங்களைக் கொண்டு இறங்கியதாகும் இந்த குர்ஆன். இறக்கியருளப்பட்ட உடனுடனே அவ்வசனங்கள் நம்பிக்கைக்கைகுரிய எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டது. இன்னும் எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது (ஸல்) அவர்கள், அவ்வப்போது இறங்கிய ஒவ்வொரு வசனங்களையும் முன்பு இறங்கிய வசனங்களோடு ஒத்துநோக்கி அவைகளோடு பொருத்திப் போகிறதா? இல்லையா என்று பார்த்து பதிக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும், நிகழ்வுகளுக்கும் தொடர்புடைய, ஏற்புடைய, தேவையுடைய வசனங்களே இறக்கியருளப்பட்டது. இறக்கியருளப்பட்ட அதேவகையில் அப்படியே பதிக்கப்படவும் செய்யப்பட்டது. ஒரே காலகட்டதிலும், சூழ்நிலையிலும் எழுதப்பட்ட நூல்களில் கூட முரண்பாடுகள் காணப்படுவதுண்டு. ஆனால் குர்ஆன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். குர்ஆனில் எந்தவொரு வசனமும் மற்றோரு வசனத்தோடு முரண்படுவதில்லை. மாறுபட்ட சூழ்நிலையில் ஒரு மனிதர் கற்பித்த கற்பனை விவரங்களே குர்ஆனில் உள்ளதென்றால் அதில் பல முரண்பாடுகள் ஏற்பட வழியுண்டு. ஆனால், இதில் யாதொரு முரண்பாடும் இல்லாததே இது யாவற்றிலும் மிகைத்தவனான படைத்த இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது. இதனை திட்டவட்டமாக குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்'அல்குர்ஆன் 4:32


வித்தியாசங்களும், வேறுபாடுகளும்

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் குர்ஆனில் சில முரண்பாடுகள் உண்டு என்று எடுத்துக்காட்டுகின்றார்களே? இதன் உண்மை நிலை என்ன?

குர்ஆன் இறைவனின் வாக்கு ஆகும். அதில் எந்தவொறு முரண்பாடும் இல்லை. மனித கற்பனையில் உருவான ஒரு வசனமாவது குர்ஆனில் நுழைக்கப்பட்டிருக்குமானால் அது நிச்சயமாக மற்ற வசனங்களோடு முரண்பட்டிருக்கும். மனித கையூடல் எதுவும் ஏற்படாத வண்ணம் இறைவன் தன் இறுதி வேதத்தை காத்து அருள்கின்றான். இது இறுதி நாள் வரைக்கும் பாதுகாக்கப்படவே செய்யும். இது இறைவனின் வாக்குறுதியாகும். அதை இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம். நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். – அல்குர்ஆன் 15:7

மனிதர்களுடைய கையூடல் ஏற்பட்டதாலே முந்தைய வேதங்கள் பரிசுத்த தன்மையை இழந்தது. இயலாமையிலிருந்து ஒழிந்தோட முடியாதவைகளே முரண்பாடுகள். இருவேறு நபர்கள் ஒரு விஷயத்தைக் குறித்து விளக்குவதில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பாகும். பைபிளிலும் மற்ற வேதக்கிரந்தங்களிலும் காணப்படும் முரண்பாடுகள், இவ்வகையிலுள்ள முரண்பாடுகளாகும். முரண்பாடற்ற பரிசுத்த வேத கிரந்தங்களின் சொந்தக்காரர்கள், நாங்கள் என்று உரிமை கொண்டாடுபவர்கள் கூட தங்கள் மதகிரந்தத்தின் முரண்பாடுகளை மறைத்து வைக்கவும் அதிலிருந்து கவனத்தைத் திருப்பவும் வேண்டி, குர்ஆனிலே முரண்பாடு உள்ளது என்று கூறி வீதிக்கு வந்துள்ளனர்.

குர்ஆனிலே 'முரண்பாடுகள்' ஒன்றுமில்லை என்று கூறுவதால் 'வித்தியாசம்' ஒன்றுமில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. வித்தியாசமும் முரண்பாடும் ஒன்றல்ல, வேறுவேறு ஆகும். வித்தியாசங்களை முரண்பாடாக எடுத்துக்கொண்டே குர்ஆனில் முரண்பாடுகள் உண்டென்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதை புரிந்துக்கொள்ள ஒரு எடுத்துக்காட்டு: பைபிள் புதிய ஏற்பட்டிலுள்ள முக்கியமான ஒரு முரண்பாடு இயேசுவின் வம்சவரலாறு பற்றிய முரண்பாடு. மத்தேயுவும் (1:6-16) லூக்காவும் (3:23-31) கூறும் இயேசுவின் வம்சாவழி பற்றிய விவரங்களில் பெரும் முரண்பாடுகள் உண்டு. அதன் காரணம் மத்தேயு – தாவீதின் குமாரனாகிய சாலமோனின் புத்திர பரம்பரையிலும், லூக்கா – தாவீதின் குமாரனாகிய நாத்தானின் புத்திர பரம்பரையிலும், இயேசுவை கொண்டு வர முயற்சித்ததாகும். (இது குறித்து விரிவாக காண இங்கே அழுத்தவும்)

மத்தேயு கூறும் பரம்பரை பட்டியலில் தாவீது முதல் இயேசு வரை 28 நபர்கள் வருகின்றனர். லூக்கா கூறும் பரம்பரை பட்டியலிலோ தாவீது முதல் இயேசு வரை 42 நபர்கள் வருகின்றனர். இயேசுவின் தந்தையாக கூறப்படும் யோசேப்பின் தந்தை யார் என்று கூறும்பிரச்சனைகள் துவங்கி முரண்பாடுகளும் துவங்குகிறது. யோசேப்பின் தந்தை பற்றி மத்தேயு கூறும்போது 'யாக்கோபு' என்றும் லூக்கா 'ஏலி' என்றும் கூறுகின்றனர். ஒருவருக்கு ஒரு தந்தையே இருக்க முடியும். ஆனால் இங்கேயோ ஒருவருக்கு தந்தையாக இரண்டு நபர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அப்படியானால் இதுவொரு தெளிவான முரண்பாடு அல்லவா? ஆனால், மத்தேயுவும் லூக்காவும் யோசேப்பின் சகோதரனின் பெயரை கூறியிருந்தாலோ - மத்தேயு 'யோசேப்பின் சகோதரன் 'யாக்கோபு' என்றும், லூக்கா யோசேப்பின் சகோதரன் 'ஏலி' என்றும் கூறியதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த விவரங்கள் மத்தியில் முரண்பாடு இருக்கின்றதா? என்றால் இல்லை. ஏனெனில், ஒருவருக்கு இரண்டு சகோதரன் இருப்பது இயல்பான ஒன்றாகும். மத்தேயு யோசேப்பின் சகோதரன் யாக்கோபைக் குறித்தும், லூக்கா யோசேப்பின் மற்றொரு சகோதரன் 'ஏலி'யைக் குறித்தும் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம். இது இரண்டு பேர்கள் கூறிய விவரங்களில் ஏற்பட்ட வித்தியாசத்தின் உதாரணம். இந்த வகையான வித்தியாசம் முரண்பாடு அல்ல என்பதை நாம் விளங்க வேண்டும்.

குர்ஆன் ஒரு வரலாற்று நூல் அல்ல. எனினும், வரலாற்று சம்பவங்களைக் கூறும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உண்டு. ஆனால் பைபிளில் காணப்படும் வகையில் சம்பவங்கள் தெடராக வரிசைப்படியாக இருப்பதில்லை. அதற்கு காரணமுண்டு. இஸ்ரவேல் சமுதாயத்தின் வரலாறே பழைய ஏற்பட்டில் உள்ளது. பிரபஞ்ச உற்பத்தி துவங்கி மோசேயின் மரணம் வரையுள்ள சம்பவங்களே முதல் ஐந்து ஆகாமங்களில் உள்ளது. மற்ற நூல்களில் மற்ற தீர்க்கதரிசிகளின் கதைகளே உள்ளது. புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களிலேயும் இயேசுவின் கதையையே நமக்கு காணமுடியும். இவையெல்லாம் வரலாற்று நூல்களில் அமைக்கப்படும் முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குர்ஆன் இந்த முறையில் வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கவேயில்லை. குர்ஆன் உபதேசிக்கும் தார்மீக கடமைகளுக்கும், படிப்பினைகளுக்கும், முன் காலச் சம்பவங்களை ஆதாரமாக உடன் எடுத்து வைக்க மட்டுமே செய்கிறது. அதனாலேயே உபதேசங்களுக்கு ஆதாரம் சேர்க்க அவசியமான சம்வங்களை மட்டும் எடுத்து கூறும் பாணியை குர்ஆன் கையாண்டுள்ளது. இப்படி கூறும் போது வரலாற்று காலத்தொடர்பைப் பற்றி அக்கரை எடுத்துக் கொள்வதேயில்லை. அதனுடைய அவசியமும் இல்லை.

வரலாற்றுக் குறிப்புகளை குர்ஆன் கூறும் முறையை மறைத்து காட்டிக்கொண்டு, இது முரண்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மோசேயுடைய வரலாற்றுச் சம்பவங்களை கூறிய பிறகே, சில இடங்களில் இப்ராஹீமின் வரலாற்று சம்பவங்களைக் கூறும். இதனால் இப்ராஹீமுக்கு  முன்போ மோசே வாழ்ந்தார் என்று குர்ஆன் கருதவில்லை. மோசேயுடைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்து வைக்கும் போது அது தொடர்பான படிப்பினைகள் இப்ராஹீமின் வரலாற்றில் இருக்கும்போது அதையும் உடன் எடுத்து வைக்கிறது. அதுபோல் இப்ராஹீமின் வரலற்றிலுள்ள படிப்பினைகளை எடுத்துவைக்கும் போது தொடர்புடைய மோசேவின் வரலாற்றிலுள்ள படிப்பினை சம்பவங்களை எடுத்து வைக்கிறது. இதனால் இதை வரிசைப்படியாக எடுக்கக்கூடாது. வரிசைப்படியாக எடுக்கும்படி குர்ஆனில் ஒரு இடத்திலும் கூறப்படவும் இல்லை. அதனால், அத்தகைய சம்பவ விவரங்கள் முரண்பாடுகளுக்கு உட்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி அவர்கள் குர்ஆனில் எதை எதையெல்லாம் முரண்பாடுகள் என்று கூறுகிறார்கள் - அவற்றுக்கான விளக்கம் என்ன? குர்ஆனில் முரண்பாடுகள் இருக்கின்றது என்று கூறி அவர்கள் எந்த வகையில் தவறு செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்...

Sunday, July 19, 2009

ஹாரூனின் சகோதரி மர்யம் - திருக்குர்ஆனில் சரித்திர தவறா?


திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!

பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் 'குர்ஆனில் சரித்திரத் தவறு - மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?' என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.

குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)
இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?


இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: 'என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) 'அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் - மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: 'மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!'

19:28 'ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).

இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு 'இறுதித்தூது' என்ற எமது சகோதர வலைத்தளத்தில் மேற்கண்ட இந்தக் குற்ச்சாட்டை பின்னூட்டமிட்டு கூடவே கீழ்கண்ட அவரது 'வீர ஆவேச' கருத்தையும் பதித்திருந்தார்:

நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்

உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.

நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.


எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.

இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?
என்று எழுதுகின்றார்.

இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.

ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று 'மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது' என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?

உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், 'மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக - கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?

குர்ஆனில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே - (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், 'ஹாரூனுடைய சகோதரி' என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு 'மூசாவின் சகோதரியே!' என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி 'ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?' என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் 'பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்' என்று விளக்கமளித்தார்கள்
.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!

ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்) ஆனால் இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் - அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா?

மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக 'ஹாருனின் சகோதரரியே' என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை 'பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி' என்று வாதிடுவார்களா?

அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் 'முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்' என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.

அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.


குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?


அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான 'புரோட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான கூடுதல் தகவல்களைக் காண இங்கே அழுத்தவும்.

எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் - சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

கிறிஸ்தவர்களின் அடுத்து குற்றச்சாட்டில் சந்திப்போம்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Tuesday, March 03, 2009

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மிஷினரிகள் குர்ஆனில் ஏதேனும் முரண்பாடு கிடைக்குமா என்று தேடத்தொடங்கியதன் விளைவு, தற்போது நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுத தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடாகத்தான் 'குர்ஆனில் முரண்பாடு - நோவாவின் வயது?' என்று அவர்களால் சமீபத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த பதிவு எந்த அளவுக்கு பலவீனமான வாதங்களை கொண்டிருந்தது என்பதை எமது பதில் பதிவான 'நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா? என்ற கட்டுரையின் மூலம் விளக்கமளித்திருந்தோம். அதே போன்று அதே நோவாவின் வரலாற்றில் மற்றுமொரு குழப்பம் இருக்கின்றது என்று மேலும் ஒரு பதிவை ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் எந்த அளவுக்கு பலவீனமான வாதத்தைக் கொண்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்:

அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் நூஹ் (அலை) அவர்களின காலத்தில் நடந்த சம்பவத்தை பின்வருமாறு கூறுகின்றான்:

இன்னும்; நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். -அல்குர்ஆன் 25:37

மற்றோர் வசனத்தில்: நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள். - அல்குர்ஆன் 26:105

இந்த வசனங்களில் இறைவன் நூஹ் நபியுடைய காலத்தவர்கள் இறைத்தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று பன்மையாக கூறுகின்றான்.

இதைப்பற்றி உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது:

நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?

பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

இப்படி குறிப்பிட்டு விட்டு கீழ்கானும் வசனத்தைக் கேடிட்டுக்காட்டி அதன் மூலம் ஒரு கேள்வியையும் முன் வைக்கின்றார்:

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;. அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். -அல்குர்ஆன் 37:77

இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?

இது தான் இவரது கேள்வி. இந்தக் கேள்வியின் மூலம் இவரது அறியாமை வெளிக்காட்டப்படுவதுடன் - குர்ஆனை எப்படியேனும் குற்றம் சுமத்தியாகவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது என்பதும் தெளிவாக விளங்கும். எனினும் இவரது இந்தக் கேள்விக்கு பதில் மிக எளிதானது. ஏனெனில் 'தூதர்கள்' என்றால் யார் யார்? தூதர்கள் என்று பன்மையாக சொல்லப்படுவது ஏன்? என்று விளங்கிக் கொண்டால் பதில் கிடைத்துவிடும்.

அதற்கு முன்பாக இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?' என்று கேள்விக்கான பதில், அந்த தூதர்கள் யாரும் வெள்ளத்தில் முழ்கடிக்கப்படவில்லை. காரணம் நூஹ் (அலை) அவர்களின சமுதாயத்திற்கு நூஹ் (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் அனுப்பப்படவில்லை. எனவே இந்த கேள்விக்கு வேலையே இல்லை.

அப்படியானால், குர்ஆன் ஏன் பன்மையில் தூதர்கள் என்று குறிப்பிடுகிறது? அவ்வாறு குறிப்பிடப்படும் அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? அதையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

குர்ஆனின் ஒரு வசனத்திற்கு அதன் பிற வசனங்கள் விளக்கமாக இருக்கும். அல்லது நபி மொழிகள் அதற்கு விளக்கமாக அமையும். ஆனால் இந்த கிறிஸ்தவரோ இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் அவ்வசனத்தில் கூறப்பட்ட 'தூதர்கள்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு 'பார்த்தீர்களா முரண்பாடு உள்ளது' என்று பிதற்றுவது குர்ஆனில் குறை காணவேண்டும் என்ற குறுமதியின் வெளிப்பாடு மட்டுமே!

இவர் குறிப்பிடும் அந்த வசனத்தில் 'நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? என்பதை மற்ற குர்ஆன் வசனங்களை கவனித்தாலே உன்மை விளங்கும்.

இவ்வாறு பன்மையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னும் சில வசனங்கள்:

நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்। அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது; ''நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' 26:105, 106


ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது 26:123, 124

ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:140,141

லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது, 26:160,161

தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள். ஷுஐப் அவர்களிடம்; ''நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:176,177

நூஹ் உடைய சமூகத்தவர்கள் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று கூறிய போது அவர்களுக்கிடையே வாழ்ந்திருந்த தூதரைப் பற்றிக் கூறும் போது நூஹ் (அலை) பற்றி மட்டுமே குறிப்பிடுகிறான்.

ஸமூது சமுதயாத்தினர் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று குறிப்பிட்டு விட்டு அவர்களுக்கிடையே செய்தியைச் சொன்னவரைப் பற்றிக் கூறுகையில் ஸாலிஹ் (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடுகிறான்.

லூத் நபியின் சமூகத்தைப் பற்றியும் மத்யன் வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்தி என்ன? ஒவ்வவொரு சமூகத்தவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரைப் பொய்ப்பிப்பது என்பது மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் பொய்ப்பிப்பதற்கு சமம் என்பதாகும்। இக்கருத்தைத் தான் பிரபல திருமறை விரிவுரையாளரான இமாம் இப்னு கஃதீர் (ரஹ்) அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

(Allah destroyed them completely, and similar (awaits) the disbelievers) (47:10). And when the people of Nuh denied him, Allah destroyed them likewise, for whoever denies one Messenger denies all the Messengers, because there is no difference between one Messenger and another. If it had so happened that Allah had sent all His Messengers to them, they would have denied them all. (Tafsir Ibn Kathir – English version – Darusssalam)

இறைதூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமும் அவர்கள் கொண்டு வந்த செய்தியும் ஒன்றாக இருக்கும் போது அவர்களில் ஒருவரை நிராகரித்தல் மற்ற அனைவரையும் நிராகரிப்பதற்குச் சமமே!

உதாரணமாக, முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டு, ஈஸா (அலை) மூஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ள வில்லையானால், இறைவனால் அனுப்பப்பட்ட மொத்த தூதர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பொருளாக அமையும். எனவே அவர் முஸ்லீமாக - இறைநம்பிக்கைக் கொண்டவராக முடியாது. அதே போல் முஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டுவிட்டு முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்தால் அவர்களும் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீமாக முடியாது. அதே போல் இறைதூதர்களான வானவர்களை (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) ஏற்க மறுத்து நிராகரிப்பவர்களும் இறைநம்பிக்கையுடையவர்களாக ஆக முடியாது. காரணம் இறைவனால் அனுப்பபட்ட தூதர்கள் அனைவரும் ஒரே செய்தியைத்தான் கொண்டுவந்தார்கள். அவர்கள் போதித்ததெல்லாம் ஒரே கொள்கையைத்தான் என்று குர்ஆன் கூறுகின்றது:

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ழைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். 16:36

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. 21:25

இவர்களில் ஒருவரை ஏற்றுக்கொண்டு ஒருவரை நிராகரித்தாலும் அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆக முடியாது. அதைத் தான் பின்வரும் வசனங்களின் மூலம் இறைவன் தெளிவுபடுத்தப்படுகின்றது:

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, ''நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். – அல்குர்ஆன் 4:150,१५१

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும்விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும் நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின்கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் அது, தனக்குமுன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது இன்னும் அது வழிகாட்டியாகவும்,நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (2:97)

எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும்,ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறுநிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:98)

பொதுவாக இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இறை தூதர்களான வானவர்கள் (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) உட்பட அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள் - 2:285

(முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்'' என்று கூறுவீர்களாக -2:136

இதில் இறைவனின் செய்தியைக் கொண்டுவரும் ஒருவரை நிராகரித்தால் கூட அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீம்களாக முடியாது என்பது தெளிவாக விளங்கும். அவர்களுக்கு அனுப்பபட்ட தூதர்களை ஏற்றுக்கொண்டு மற்ற தூதர்கள் பற்றி சொல்லும் போது அதை ஏற்க முடியாது என்று சொன்னாலும், எனக்குப் பின் இந்த தூதர் வருவார் என்று நம்பமறுத்தாலும், இறைதூதர்களான வானவர்களையும் ஏற்க முடியாது என்று சொன்னாலும் அதுவும் இறைவனின் தூதர்களை நிராகரித்தவர் என்று தான் பொருள்படும். இன்னும் சொல்லப்போனால் ஒருவர் ஒரு தூதரை நிராகரிக்கின்றார் என்று சொன்னால் அவர் மற்றவர்களையும் நிராகரிக்கின்றார். அந்த மற்றவர்களில் வானவர்களும் அடங்குவர் நபிமார்களான மனிதர்களும் அடங்குவர்.

அது போல் தான் நூஹ் (அலை) அவாகளின் சமுதாயத்தினார் நூஹ் அவர்களை நிராகரித்ததுடன் மற்ற இறைத்தூதர்களான வானவர்கள் உட்பட, மற்ற தூதர்களையும் (அவர்களுக்கு பின்னர் வர இருப்பவர்களையும்) அவர்களும் போலிகள் தான் அவர்களை நம்பமாட்டோம் என்று நிராகரிக்கின்றனர். இதை தான் இறைவன் 'நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று கூறுகின்றான்। எனவே இவர் கேட்பது போன்று மற்ற தூதர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்கே இங்கு வேலை இல்லை என்பது தெளிவாக விளங்கும்। ஏனெனில் நூஹ் அவர்கள் சமுதாயத்திற்கு அவர்கள் மட்டும் தான் அனுப்பப்பட்டார்கள்।

அடுத்து இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. என்று குறிப்பிடுகின்றார். இது முற்றிலும் தவறான – அறைவேக்காட்டுத்தனமாக வாதம். இவர் சொல்வது போன்று தான் குர்ஆன் குறிப்பிட்டுக் கூறுகின்றதா என்றால் கிடையாது. மாறாக அவரது குடும்பத்தாரையும், அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் காப்பாற்றினோம் என்று தான் குறிப்பிடுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) ''உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்'' என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை. (அல்குர்ஆன் - 11:40) (மேலும் பார்க்க 7:64, 10:73)

எனவே இவர் எந்த அளவுக்கு அறைகுறை ஞானத்துடன் கேள்விகளைக் கேட்கின்றார் என்பது இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

உமர் என்ற கிறிஸ்தவர் இப்படி குற்றநோக்குடன் அறியாமையில் ஏன் பதிவுகள் போடுகின்றார் என்றால், பெரும்பாலும் அவர் சுயமாக எதையும் எழுதுவது கிடையாது। ஆன்சரிங் இஸ்லாம் என்றத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழ் மக்களைக் குழப்புவது தான் இவரது தலையாய பணி. இதற்காகவே இவருக்கு வெளிநாட்டிலிருந்து கூலிகள் கிடைக்கின்றது போலும். இவர் மொழிப்பெயர்த்து வெளியிடும் கட்டுரைகள் சரியா அல்லது தவறா? நாம் போடுவது முறையான பதில் தானா? என்றெல்லாம் இவர் பார்ப்பது கிடையாது. இஸ்லாத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதா? குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லப்படுகின்றதா? அது போதும். அது சரியோ அல்லது தவறோ அதை ஒரு பதிவாகப் போட்டுவிட வேண்டியது தான் என்று மனம் போனப் போக்கில் மொழிப்பெயர்த்து வெளியிட்டுவிட்டு பின்னர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார். பாவம் அவர் என்ன செய்வார். வாங்கும் கூலிக்கு வேலை செய்துதானே ஆக வேண்டும்.

நோவாவின் வரலாற்றில் முரண்படும் பைபிள் - அடுத்த பதிவில் இறைவன் நாடினால்...
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Thursday, February 26, 2009

நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்
.
.
பைபிளின் மீது முஸ்லிம்களால் வைக்கப்படும் எண்ணிலடங்கா முரண்பாடுளுக்கும் - குழப்பங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு எப்படியேனும் குர்ஆனின் மீது குற்றம் சுமத்தியாகவேண்டும் அதில் எப்படியாவது முரண்பாடுகளைக் கண்டுபிடித்து அவர்களை திணரடித்துவிட (?) வேண்டும் என்ற நோக்கத்துடன் சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷினரிகளால் குர்ஆனில் முரண்பாடு என்று தங்கள் தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றது. அதில் நோவா (நூஹ் நபி) சம்பந்தப்பட்ட பதிவை உமர் என்ற கிறிஸ்தவர் 'குர்ஆன் முரண்பாடுகள் - நோவாவின் வயது' என்ற தலைப்பில் ஆங்கிலத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருந்தார். அதாவது குர்ஆன் நோவாவின் வயதை சொல்வதில் முரண்படுகின்றதாம்.

இவர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்த - பலவீனமான விமர்சனங்களை குர்ஆனின் மீதும் இஸ்லாத்தின் மீதும் வைக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஒன்றே சரியான சான்று. அவர்கள் கண்டுபிடித்துள்ள அதிபாயங்கரமான - இடியாப்ப சிக்கல் நிறைந்த (?) முரண்பாட்டை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

Quote:

பைபிளிலும் மற்றும் குர்ஆனிலும் சொல்லப்பட்ட நோவாவின் கதையை ஒருவர் படித்தால், கீழ் கண்ட விவரங்களை அவர் காண வேண்டி வரும்.

ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.

சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது

நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது

வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள 'அவர்கள் மத்தியில்' என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள 'அவருடைய சமூகத்தாரிடம்' என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.

என்ன அபாரமான கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எப்படி அலசி ஆராய்ந்து முரண்பாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதை பார்த்தீர்களா? குர்ஆனில் 29:14ம் வசனத்தில் முரண்பாடாம். எங்கே முரண்பாடு வருகின்றது? இந்த வசனத்திற்கு எதிரான - முரண்பட்ட குர்ஆன் வசனம் எது? ஒன்றுமே கிடையாது. 'காமாலைக் கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சல்' என்பது போல, குர்ஆனில் எங்கேயாவது முரண்பாடு கிடைக்குமா? என்று தேடியவருக்கு இந்த வசனம் முரண்பாடாக தெரிந்துவிட்டது போலும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;. ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்துகின்றான். ஒன்று நூஹ் (அலை) அவர்களின் மொத்த வயது. மற்றொன்று அவர்கள் காலத்தில் நடந்த பெரு வெள்ளம்.

இதில் என்ன முரண்பாட்டை இவர்கள் கண்டுவிட்டனர்? அல்லாஹ் தனது திருமறையில் 'நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் (அதாவது 950 ஆண்டுகள்) தங்கியிருந்தார்' என்கிறான். 'அவருடைய சமூகத்தார்' என்றால் யார்? நூஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டவர்களையும் குறிக்கும், நிராகரித்தவர்களையும் குறிக்கும், பெருவெள்ளத்திற்கு பின் மீதமிருந்தவர்களையும் குறிக்கும். மொத்தத்தில் அச்சமூகத்தார் என்பது நோவா உயிருடன் இருக்கும் பொழுது அவருடன் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் என்பது பாமரனுக்கும் விளங்கும்.

இதில் என்ன முரண்பாடு இருக்கின்றது?

இவர்களது அபார கண்டுபிடிப்பு (?) என்ன வென்றால், குர்ஆனின் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள 950 வருடம் என்பது வெள்ளப்பிரளயம் வரையிலும் தான் குறிக்கும், அவர்களின் முழு வயதையும் குறிக்காது. எனவே இது முரண்பாடான வசனம் என்கிறார். இது தான் இவர் சொல்லவரும் கருத்து. அதை மற்றுமொரு இடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

Quote:

இந்த குர்ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்

ஒரு வாதத்திற்காக இவர் விளங்கி இருப்பது போன்றே வைத்துக்கொள்வோம். இவர்களின் அபார கண்டுபிடிப்பின் படி இந்த வசனம் வேறு எந்த குர்ஆன் வசனத்துடன் முரண்படுகின்றது? அதையல்லவா தெரிவித்திருக்க வேண்டும். முரண்பாடு என்றால் என்ன? ஒரு வசனம் மற்றோர் வசனத்திற்கு முரண்பட வேண்டும்.

ஒரு குர்ஆன் வசனத்தில் நூஹ் (அலை) (நோவா) அவர்களின் மொத்த வயதே 950 என்று சொல்லிவிட்டு மற்றோர் குர்ஆன் வசனத்தில் பெரு வெள்ளம் நிகழ்ந்த பொழுது அவர்களது வயது 950 என்று சொல்லியிருந்தால் முரண்பாடு எனலாம். மாறாக, எந்த ஒரு வசனத்தையும் காட்டாமல் குர்ஆனின் இந்த 29:14ம் வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு, முஹம்மது (ஸல்) அவர்கள் ஞாபக மறதியால் சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? சற்று சிந்திக்க வேண்டாமா? முரண்பாடு என்று சொல்வதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?

உமர் அவர்களே! உன்மையில் முரண்பாடு என்றால் என்னத்தெரியுமா? இதோ உங்கள் பைபிளை வைத்தே நீங்கள் குறிப்பிட்டுள்ள நோவாவின் வயதை வைத்தே விளக்குகின்றேன் படியுங்கள்:

பைபிளில் கர்த்தர் சொல்லுகின்றார்:

அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3

இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள் மொத்தமே 120 வருடம் தான் என்று பைபிள் குறிப்பிடுகின்றது. ஆனால் நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 120 தான் என்றால், பின்னர் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? இல்லை எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா?

அடுத்து அதே ஆதியாகமத்தில் அதற்கடுத்த வசனத்தில் உள்ள முரண்பாடுகளைப் பாருங்கள் உமர் அவர்களே:

பைபிள் கூறுகின்றது : தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:6

கர்த்தர் தான் மனிதனையே படைத்தார். அவன் என்னென்ன செய்வான் உங்களைப் போன்றவர்களெல்லாம் வசனங்களைத் திரித்தும் மாற்றியும் எப்படி எல்லாம் அப்பாவிக் கிறிஸ்தவர்களை ஏமாற்றுவார்கள், முரண்பாடு இல்லாததை எப்படி எல்லாம் முரண்பாடு என்று சொல்லுவார்கள் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கடவுள் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மணஸ்தாபப்படுவாரா? கடவுள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா? ஆனால் அப்படி பலவீனரைப்போன்று தெரியாமல் படைத்துவிட்டோமே என்று மனஸ்தாபப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இந்த வசனத்திற்கு நேர் முரணாக பைபிளில் உள்ள மற்ற வசனங்களைப் பாருங்கள்:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19

கர்த்தர் மனஸ்தாபப்படுவாரா? மாட்டாரா? ஆனால் மேலே ஆதியாகமம் 6:6ம் வசனத்தில் அவர் மனிதனைப் படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கே உள்ள வசனங்களில் மனஸ்தாபப் பட அவர் என்ன பலவீனங்கள் நிறைந்த மனிதனா என்கிறது? எதுய்யா சரி?

இவைதான் உங்கள் பைபிளின் லட்சனம். (இது வெறும் Sample முரண்பாடுகள் தான். விரைவில் தொடர்ந்து வரும்) இப்படி முரண்பட்ட புத்தகத்தைத் தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த பைபிளை வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு என்கிறீர்கள். முரண்பாடு என்றால் என்னவென்று முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். பின்னர் முரண்பாட்டைப் பற்றி எழுதுங்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள்.



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Monday, January 12, 2009

அப்ரஹா மன்னனின் யானைப்படையும் - கிறிஸ்தவர்களின் கேள்வியும

அன்பு சகோதரருக்கு

முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.

கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.

Name: ansar
email: hssnansar@...
Location: srilanka
Subject: Question
....................................

திருக்குர்ஆனில் 105வது அத்தியாயமாக அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் கஅபா ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனின் யானைப் படையை அழித்து கஅபாவை இறைவன் காப்பாற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகும்.

இதன் பின்னர் அரபுகள் தம்முடைய ஆண்டுகளை இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்தே யானை ஆண்டு என்று அமைத்துக் கொண்டார்கள்.

சகோதரரர் அன்சர் மூலம் கேட்கப்படும் அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகளே இல்லையே, எத்தியோப்பியாவில் கூட அன்றைக்கு யானைகள் இருந்ததில்லை என்று பலர் கூறுகின்றர்களே, அப்படி இருக்கையில் இந்த யானைப்படை சம்பவம் அன்றைக்கு அதுவும் யானைகளே இல்லாத அரபுப் பிரதேசத்தில் எப்படி நடந்திருக்கும், எனவே இது குர்ஆனில் உள்ள தவறு என்ற தோரனையில் இந்த கேள்வியை எழுப்பி இருக்கின்றார்கள். நியாயமாக சிந்தித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி தவறானது என்பதை உணரலாம்.

ஏனென்றால் எந்த ஒரு இடத்திலும் அங்கே வாழக்கூடியதும் அங்கே உற்பத்தியாகக்கூடியது மட்டும் தான் இருக்கும் அல்லது இருக்கமுடியும் என்று நினைப்பது தவறு.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒட்டகம் இல்லை என்பதற்காக அது வாழக்கூடிய அரபு பிரதேசத்திலிருந்தோ அல்லது ராஜஸ்தானிலிருந்தோ அதைக் கொண்டுவரமுடியாது என்று சொல்லமுடியுமா?

கங்காரு என்ற விலங்கு இந்தியாவில் எங்குமே வாழுவது கிடையாது. இந்தியாவில் இல்லை என்பதற்காக அந்த விலங்கை அது வாழக்கூடிய ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கெண்டுவர முடியாது என்று யாராவது சொல்வோமா?

அது போலத்தான் அக்காலத்தில் பலம் வாய்ந்த மன்னனாக இருந்த அப்ரஹா என்பவன் தனது பலத்தைக் காட்டுவதற்காக யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் இன்னும் தனது ராஜ்யத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தனக்கு தேவையான இன்னபிற படைகளையும் அது கிடைகக்கூடிய பகுதிகளிலிருந்து தயார் செய்திருப்பான். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு இது ஒன்றும கடினமான காரியமாக இருக்காது - இருக்கவும்முடியாது.

பொதுவாக இந்தக் கேள்வி எப்பொழுது வரவேண்டும் என்றால்? (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த) 1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றாலோ, அல்லது விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் எப்படி ரோபோவைக் மனிதன் உருவாக்குகின்றானோ அதே போலத்தான் யானைகளும் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் தான் இந்தக் கேள்வியே வரவேண்டும்.

1400 ஆண்டுகளும் முன் யானைகள் இருந்தததா? இல்லையா? அப்படி யானைகள் ஏதும் இருந்திருந்தால் அதை அது கிடைக்கக்கூடிய பகுதியிலிருந்து கொண்டுவரமுடியுமா முடியாதா? அல்லது ஒரு இடத்தில் கிடைக்காத பொருளோ அல்லது ஏதேனும் உயிரினமே அது கிடைக்கக்கூடிய இடத்திலிருந்து அது கிடைக்காத வேறு இடங்களுக்கு கொண்டுவரமுடியுமா? என்பதை கேள்விக் கேட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் மற்ற ஆதாரங்கள் வைத்து நிரூபிப்பதைவிட பைபிளின் சான்றுகளை வைத்து நிரூபிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதன் வசனங்களையே நாம் சான்றாக வைக்கின்றோம்.
.
'ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 1 இராஜாக்கள் 10 : 22, 2 நாளாகமம் 9 : 21

மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன். அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும் பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் -3:15

தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள். அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது. யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக்கொண்டுவந்தார்கள். எசேக்கியேல் 27 : 15
அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது. அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. உன்னதப்பாட்டு - 5 : 14
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், ..உன்னதப்பாட்டு 7 : 4
1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றிருந்தால் பைபிலில் 'யானைத்தந்தங்கள்' என்ற வார்த்தை எப்படி இடம் பெற்றிருக்கும்? அதன் தந்தங்கள் எப்படி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மன்னர்களுக்கு கிடைத்திருக்கும்?

அதுமட்டுமல்ல தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை கப்பல்களின் மூலமாக அது கிடைக்கக்கூடிய வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பதையும், வியாபாரிகளான தேதான் புத்திரர்கள் தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை உலகின் பலத் தீவுகளுக்கு சென்று வாங்கி வந்துள்ளனர் என்பதையும், யானைத்தந்தங்களையும், கருங்காளி மரங்களையும் அவ்வாறே கொண்டு வந்துள்ளனர் என்பதையும் இந்த பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு விளக்கப்படுகின்றது. அதாவது தங்கள் நாட்டில் கிடைக்காதவற்றை வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. அதே போல் தான் இந்த அப்ரஹா என்ற மன்னனும் தனது படைக்குத் தேவையான யானைகளை அது வாழக்கூடிய இடங்களிலிருந்து கொண்டுவந்திருப்பான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

சகோதரரர் அன்சர் அவர்களிடம் கேள்வி கேட்ட அந்த கிறிஸ்தவர்கள் இந்த திருக்குர்ஆனின் 105வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து குர்ஆனைப் பொய்ப்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதும் அது எப்படி அபத்தமானது என்பதை பைபிள் ஆதாரங்களை வைத்தே நாம் பார்த்தோம். அத்துடன் இந்த சம்பவத்தின் மூலம் திருக்குர்ஆன் ஓர் ஒப்பற்ற இறைவேதம் என்பதற்கான முக்கியமான வேறு சான்றும் உள்ளது என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.

திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)

புகழனைத்தும் இறைவனுக்கே!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.

Saturday, October 04, 2008

சிந்திப்பது மூளையா? இதயமா?

பதில்: மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?'என்று கேட்கிறோம்.

ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம்.

சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிலிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

''இதயத்தில் உனக்கு இடம் இல்லை'' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலி செய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்று தான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள்.

இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், 'மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.

அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச்சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி லி உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Tuesday, September 16, 2008

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்: ஒரு குர்‍ஆனும் பல குர்‍ஆன்களும்?!

7 வட்டார மொழியில் குர்ஆன் அருளப்பட்டது!
.
.
இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

-----------------------------------------------------------------------------------
//ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!

இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية

இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel - Kuwait)

முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)
2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)
3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:

1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)//

-----------------------------------------------------------------------------------


இங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,

-----------------------------------------------------------------------------------
//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//
-----------------------------------------------------------------------------------

தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.

நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,

வட்டார மொழி
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.

''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)

திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.

ஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

ஏழு வகையான ஓதுதல்

''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? என்றால் இல்லை. உதாரணமாக:

நபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:

''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.

இந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிருப்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு!

ஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.

குர்ஆன் ஓதும் முறை
''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!'' (திருக்குர்ஆன், 073:004)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)

''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..

பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.

''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.

ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.

இதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின் இனிமையான குரல் மக்களை ஈர்க்கிறது.

ஏழு வட்டார மொழி

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்றி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.

ஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.

குர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.

மேலும்,

''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்'' (திருக்குர்ஆன், 073:020)

''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)

குர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.

எம்மிடம் உள்ளது இதுவே!

இனி...

-----------------------------------------------------------------------------------
//குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.//
-----------------------------------------------------------------------------------

ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே!

ஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்!

அதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன? என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...?

சம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்திரங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.